இஸ்தான்புல்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 50 பேரை கொலைசெய்த குற்றவாளி, தன் வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிப்பார் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டு தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்றுவரும் முஸ்லீம் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார் நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர் வின்சென்ட் பீட்டர்ஸ்.
“தாக்குதல் சம்பவத்தை அடுத்து எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கை என்பது மிக விரைவானது. நியூசிலாந்து வரலாற்றிலேயே, இதுதான் மிகப்பெரிய புலன்விசாரணை” என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்ட துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன், “குற்றவாளியின் மீது நியூசிலாந்து சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதை துருக்கி செய்யும்” என்று பேசியதற்கு பதிலாக, இக்கருத்தை தெரிவித்தார் நியூசிலாந்து அமைச்சர்.
இந்த மாநாட்டில் பேசிய எர்டோகன் மேலும் கூறியதாவது, “துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் காட்டிய உடனடி அக்கறையும் கவலையும், இந்த உலகிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.
நியூசிலாந்து நாட்டில் மரண தண்டனை வழக்கத்தில் இல்லை என்பது நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி