சேலம்:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில்  தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது.

நேற்று முன்தினம் சேலத்தில் வேட்பாளர்கள் அறிமுக விழாவில் பங்குகொண்டும், கூட்டணி கட்சியினரை சந்தித்தும் ஆலோசனை நடத்தி வந்தவர்,  இன்று  சேலம் கருமந்துறை பகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

முன்னதாக இன்று காலை கருமந்துறை விநாயகர் கோவிலுக்கு சென்றவர் அங்கு, அனைத்து வேட்பாளர்களின் பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை வழிபாடு நடத்திவிட்டு தனது பிரசாரத்தை தொடங்கினார்.

கருமந்துரை விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும்,  கருமந்துறையில் பிரச்சாரம் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி அங்கிருந்து தனதுபிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

சேலம் மாவட்டம் கருமந்துறையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதீஷை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசார செய்து வருகிறார்.

பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்வர்,  இது தேர்தல் பிரச்சார துவக்க விழா நிகழ்ச்சி என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றவர்,  40 மக்களவை தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்,  18 தொகுதி இடைத் தேர்தலிலும் அதிமுக வெற்றிவாகை சூடும் என்று கூறினார்.

மேலும்,  மத்தியில் நிலையான ஆட்சி, உறுதியான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்றவர், அப்போதுதான் நாடு பாதுகாப்பாக இருக்கும்… நாடு பாதுகாப்பாக  இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் நாட்டின் பாதுகாப்பை மோடியால்தான் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

பயங்கரவாதிகளால்  40 வீரர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவம்  இனிமேலும்  நடைபெறாமல் இருக்க மோடி தலைமை அவசியம் என்றவர்,  அண்டை நாட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் குண்டுவீசி அழிக்கப்பட்டனர் என்று பெருமிதமாக கூறியவர்,  பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும்,  எதிரிப் படைகளிடம் சிக்கிய வீரரை பிரதமர் மோடி வெற்றிகரமாக மீட்டார், இவ்வளவு  வலிமையான தலைமையை பிரதமர் மோடியால்தான் தரமுடியும் என்று புகழாரம் சூட்டினார்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்து மறைந்த ஒப்பற்ற தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியோடு அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் . ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் எண்ணற்ற திட்டங்களை வழங்கினார் என்றும், அதிமுக ஆட்சியின் திட்டங்களால் எல்லாத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு வகையில் பயன்பெற்றுள்ளனர் என்று கூறியவர் அதிமுகவின் சாதனைகளாக அடுக்கத் தொடங்கினார்.

அனைத்து பகுதி மலைக்கிராமங்களுக்கும் மின்சார வசதியை கொடுத்தது அதிமுக அரசு, ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதை தடுக்க நினைக்கும் கும்பல் திமுக கும்பல், ஏழைத் தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் கொடுப்பதைக் கூட தடுக்க நினைக்கிறது திமுக மத்திய அரசின் சிறு, குறு விவசாயிகளுக்கான உதவித் தொகை முக்கால்வாசிப் பேருக்கு வந்துவிட்டது – மீதமுள்ளவர்களுக்கும் வந்துவிடும் என்று உறுதி அளித்த எடப்பாடி பழனிச்சாமி,

வாக்காளர்கள் இந்த தேர்தலில் தர்மத்தையும், நீதியையும் நிலைநாட்ட வேண்டும் என்றும்,  மத்தியிலும் மாநிலத்திலும் ஒருமித்த கருத்தோடு உள்ள கட்சிகள் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு வளர்ச்சி.

இவ்வாறு எடப்பாடி பேசினார்.