புதுச்சேரி:
புதுச்சேரியில், திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பாக, முன்னாள் முதல்வரும், சபாநாயகருமான வைத்திலிங்கம் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
அதுபோல அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டி விடுவதாக என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அவர் கொடுத்துள்ளார்.
இன்று மதியம் 12.45 மணிக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணிடம் தனது வேட்பு மனுவை வைத்தியலிங்கம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 2முறை முதல்வராகவும், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், சபாநாயகர் உள்பட அனைத்து விதமான பதவிகளையும் வகித்துள்ளார். தற்போது முதன்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
புதுச்சேரி மக்களவை தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, புதுச்சேரி தொகுதியில் தங்களது கட்சி சார்பில் கே.நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.