மும்பை
பாலிவுட் நடிகர் சல்மான்கான் தாம் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் எந்த ஒரு கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதை ஒட்டி பிரதமர் மோடி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
அவர் தனது டிவிட்டரில் “வாக்களிப்பது என்பது நமது உரிமை மட்டும் அல்ல கடமையும் ஆகும். அன்புள்ள சல்மான் கான் மற்றும் அமீர்கான் அவர்களே, நீங்கள் இளைஞர்களை உங்கள் பாணியில் ஊக்குவித்து வாக்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் நமது ஜனநாயகத்தையும் நாட்டையும் பலப்படுத்த முடியும்” என பதிந்திருந்தார்.
அதற்கு பதில் அளித்த சல்மான் கான் தனது டிவிட்டரில், “நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம். வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். அதனால் வாக்களிக்கும் தகுதி உள்ள அனைத்து இந்தியரும் தங்கள் வாக்குகளை செலுத்தி அரசை அமைப்பதில் பங்களிக்க வேண்டும்” என பதிந்தார்.
இதை ஒட்டி சல்மான் கான் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாகவும் மற்றும் பாஜகவுக்காக அவர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின. இதை பலரும் நம்பி சல்மான் கானிடம் விசாரிக்க தொடங்கி உள்ளனர்.
எனவே மக்களின் குழப்பத்தை போக்க சல்மான் கான், “நான் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதிலை. அத்துடன் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் நான் பிரசாரம் செய்யப் போவதில்லை. இவை அனைத்தும் வதந்திகள் ஆகும்” என பதிந்துள்ளார்.