சென்னை
மக்களவை தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது என்று வைகோ அறிவித்து உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்டு கட்சிகள், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளன.
இந்த கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு லோக்சபா, ஒரு ராஜ்யசபா தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. லோக்சபா தொகுதியாக ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் மதிமுக வேட்பாளராக கணேசமூர்த்தி நிறுத்தப்பட்டு உள்ளார். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடுவார் என தகவல் பரவியது.
இந்த நிலையில், கணேசமூர்த்தி தேர்தல் கமிஷன் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே மதிமுகவுக்க பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிகளின்படி குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை மதிமுக பெறாததால், பம்பரம் பறிபோனது குறிப்பிடத்தக்கது.
கட்சிகளின் சின்னம் தொடர தேர்தல் கமிஷனின் விதிகள்:
”ஒரு கட்சியின் அங்கீகாரம் தொடர வேண்டும் எனில் அந்த கட்சி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 3% வெற்றி பெற வேண்டும்.
மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு 25 தொகுதிகளில் 1 தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அப்படி இல்லை எனில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
இந்த விதிகளின்படி தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் தங்களது சொந்த சின்னங்களை இழந்துள்ளன.