சென்னை:
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தின் வருமானம் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் திருவிழா வரும் 23ந்தேதி தொடங்குகிறது. முதல்நாள் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டனர். இந்த நிலையில், ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான டிக்கெட் விலை குறைந்த பட்சம் ரூ.1300 முதல் அதிக பட்சமாக ரூ.6500 வரை நிர்ண யிக்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் டிக்கெட்டுகள் சில மணி நேரத்தில் வீற்று தீர்ந்தது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கிறார். நலநிதிக்கான காசோலையை அவர் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஐ.பி.எல். தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு அதற்கு செலவாகும் தொகை ரூ.20 கோடி, பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.