கோவை:
நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் மேலும் ஒரு இளைஞர் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதை சிபிசிஐடி காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
குலைநடுங்க வைத்துள்ள பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை காவல்துறையினர் காவல் விசாரணைக்கு எடுத்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது திருநாவுக்கரசு பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில், சபரிராஜன், சதீஷ் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள்தான் அதிகம் கிடைத்துள்ளது. ஆனால், இதுவரை எத்தனை வீடியோக்கள் கிடைத்துள்ளன என்பது குறித்து அறிவிக்கவில்லை.
இந்த வழக்கில் ஆளும் கட்சியினரின் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னொரு இளைஞரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று அல்லது நாளை கைது செய்யப்படலாம் என கூறப்படும் நிலையில், அந்த இளைஞர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையில், பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி அறிவித்த மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரிக்கு ஏராளமான பேர் புகார்கள் தெரிவித்து உள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்று பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.