பாட்னா: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பீகாரில் நடைபெறும் கூட்டணி தொகுதிப் பங்கீட்டில், 5 பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர்களும், பஸ்வான் கட்சியை சேர்ந்த 1 உறுப்பினரும் தங்களின் தொகுதிகளை நிதிஷ்குமார் கட்சியிடம் இழந்துள்ளனர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; பீகார் மாநிலத்தில், பாரதீய ஜனதா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி ஆகியவை இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கின்றன.
இதனையொட்டி, அந்தக் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தையில், நிதிஷ்குமாரின் கை ஓங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் தன் கட்சி வெற்றிபெற்ற நாளந்தா மற்றும் புர்னியா தொகுதிகளை தக்கவைத்துக் கொண்டதுடன், பாரதீய ஜனதா வெற்றிபெற்ற வால்மீகி நகர், ஜன்ஹர்பூர், கோபால்கன்ஜ்(தனி), சிவான் மற்றும் கயா(தனி) ஆகிய தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டது நிதிஷ் கட்சி.
மேலும், கடந்த தேர்தலில், பஸ்வான் கட்சி வென்ற ஒரு தொகுதியும் தற்போது ஐக்கிய ஜனதா தளத்தின் வசம் சென்றுள்ளது.
பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எஞ்சிய 6 தொகுதிகளில் பஸ்வான் கட்சி நிற்கிறது.
– மதுரை மாயாண்டி