ஒரே நாளில்- அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தங்கள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
தி.மு.க.அறிவித்த அதே நேரத்தில் தான் அ.தி.மு.க.பட்டியலும் வெளியாக இருந்தது .ஆனால் அந்த நேரத்தில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
தனது ஆதரவாளருக்கு மதுரை தொகுதியை கேட்டு போராடிய அவர்- ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ.ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யனுக்கு சீட் கொடுக்கக்கூடாது என்று கலகம் செய்தார்.
‘’வேட்பாளர் பட்டியலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முத்திரை குத்தி விட்டார். ஓபிஎஸ்சும் சம்மதித்து விட்டார்’’ என்று கூறி உதயகுமாரை சமாதானம் செய்துள்ளனர்.
7 மணிக்கு வெளியாக இருந்த பட்டியல் அமைச்சரின் கொதிப்பால்- 3 மணி நேரம் தாமதமாக வெளியானது.
அ.தி.மு.க.வில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள 6 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யின் ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ் ஆதரவு சிட்டிங் எம்.பி.க்கள் 10 பேருக்கு இந்த முறை டிக்கெட் இல்லை. அவர் தனது மகனை வேட்பாளர் ஆக்குவதிலேயே குறியாக இருந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.
மூத்த தலைவர்கள் வி.மைத்ரேயன், ராஜ.கண்ணப்பன், நத்தம் விசுவநாதன்,ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோருக்கும் ‘நோ’ சொல்லி விட்டார் ஈபிஎஸ்.
இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்க அதை விட – தி.மு.க.வில் புயலே அடிக்கும் சூழ்நிலை.
வாரிசுகள் அளவுக்கு அதிகமாகவே இந்த முறை தி.மு.க.வில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களுமே வாரிசுகள் தான்.இவர்கள் தவிர குரோர்பதிகளுக்கும் பஞ்சம் இல்லை.
கடலூர் தி.மு.க. வேட்பாளர் ரமேஷ்-முந்திரி ஏற்றுமதி செய்பவர்.தொகுதியில் பரிச்சயம் இல்லாதவர்.பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரம்- பெரும் தொழில் அதிபர்.
ஓசை படாமலும் சில வாரிசுகள் திணிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி தி.மு.க.வேட்பாளர் தனுஷ் எம்.குமாரும் வாரிசுதாரர் தான். இவரது தந்தை தனுஷ்கோடி -ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர். சாத்துர் ராமச்சந்திரன் அ.தி.மு.க.வை விட்டு விலகி- தி.மு.க.வில் சேர்ந்த போது தனுஷ்கோடியும் தி.மு.க.வில் ஐக்கியமானார்.
–பாப்பாங்குளம் பாரதி