புதுடெல்லி: ‘மரங்களின் தாய்’ என அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயதான சாலுமராடா திம்மக்கா என்ற மூதாட்டிக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகையில், அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஆசிர்வதித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏறக்குறைய 8000 மரங்கள் வரை நட்டு வளர்த்தவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 107 வயதான திம்மக்கா எனும் மூதாட்டி. இவற்றில் 400 ஆலமரங்களும் அடக்கம்.
இந்த மாபெரும் சேவையை இவர் கடந்த 65 ஆண்டுகளாக செய்து வருகிறார். மார்ச் 16ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில், இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கெளரவிக்கப்பட்டது.
விருதைப் பெறுகையில், கேமராவை நோக்கி திரும்புமாறு குடியரசுத் தலைவர் சொல்ல, அப்போது குடியரசுத் தலைவரை சற்றே குனியச் செய்து, அவரின் தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார் இந்த மூதாட்டி.
இந்த சம்பவம், அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விருந்தினர்களை நெகிழச் செய்தது.
தனக்கு குழந்தை உண்டாகவில்லை என்பதற்காக, 40ம் வயதில் தற்கொலை செய்ய விரும்பியவர் இவர். ஆனால், பின்னர் மனம் மாறி, கணவரின் உதவியுடன் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார். தற்போது 107 வயதாகும் இவர், மொத்தம் 65 ஆண்டுகளாக இந்தச் சீரிய பணியை ஆற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அப்பகுதி மக்கள், ‘மரங்களின் தாய்’ என்ற அடைமொழியைச் சூட்டி அழைத்து மகிழ்கின்றனர்.
– மதுரை மாயாண்டி