கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில்  போதுமான வேட்பாளர்கள் பாஜகவில் இல்லை என்று அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவுக்கு எதிராக தீவிரம் காட்டி வரும் பாஜக, மாநில அரசுக்கு எதிராக பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது.  திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ, கம்யூனிஸ்டு கட்சிகளின் எம்எல்ஏக்களை தங்களது கட்சிக்கு இழுத்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

இதற்கிடையில், மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமானால்,  அம்மாநிலத்தை மிகவும் பதற்றமான மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியிருந்தது.

இதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது. இதுகுறித்து கூறிய  மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ், திரிணாமூல் காங்கிரஸ் இந்த நாடகத்தை நிறுத்த வேண்டும். தேர்தலில் போட்டியிடவேண்டுமா அல்லது தர்ணா போராட்டத்தை தொடர வேண்டுமா என்பதை கட்சி தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,   திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ பாட்பரா அர்ஜூன் சங், அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரை மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் வரவேற்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் மாநில பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு  பஞ்சாயத்து மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் டிக்கெட் கொடுத்தோம்.

ஆனால் தற்போது நடைபெற உள்ள  மக்களவைத் தேர்தலில்  போட்டியிடுவதற்கும், எதிர்க்கட்சி களை வீழ்த்தி  தேர்தல்களை வென்றெடுப்பதற்கும் போதுமான தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் இல்லை என்று புலம்பினார்.

தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள், ஆனால் வாங்கு வங்கியை வென்றெடுக்கக் கூடிய போதுமான வேட்பாளர்கள்  எங்கள் கட்சியில்  இல்லை பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய தலைவர், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள  42 மக்களவை தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக  23 வெற்றி பெற வேண்டும்  இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், மாநில பாஜக தலைவர் திலிப் கோஷின் புலம்பல், மாநிலத்தில் பாஜகவின் நிலைமையை அம்பலப்படுத்தி உள்ளது.