ராய்ப்பூர்

தேர்தல் அறிக்கையில் மருத்துவ உதவிகள் குறித்த திட்டங்களை  சேர்ப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நேற்று ஒரிசா மாநிலத்தில் அவர் தேர்தல் பிரசாரம் செய்தார்.  தேர்தல் பிரசாரத்துக்கு இடையே அவர் தேர்தல் அறிக்கை தயாரிப்பதிலும் ஈடு பட்டு வருகிறார். இதை ஒட்டி அவர் நேற்று பல மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி,”வரும் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை உரிமையை தேர்தல் அறிக்கையில் சேர்க்க காங்கிரஸ் விரும்புகிறது. எனவே இது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் நான் ஆலோசனை செய்தேன். அத்துடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி நிலை அறிக்கையில் மருத்துவத்துக்கான நிதியை 3% அதிகரிக்க உத்தேசித்துள்ளது.

மருத்துவம் என்பது ஒரு அடிப்படை உரிமை மட்டுமின்றி ஒரு உணர்வும் ஆகும். அதனால் நாங்கள் இந்த அடிப்படையை பலமானதாக்க முடிவு செய்துள்ளோம். வரும் 2019ல் அமையப்போகும் காங்கிரஸ் அரசு அடிப்படை தேவைகளான மருத்துவத்துக்கும் கல்விக்கும் அதிக நிதி ஒதுக்க உள்ளது.” என தெரிவித்துள்ளார்.