கிறிஸ்ட் சர்ச், நியுஜிலாந்து
நியுஜிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டை அடுத்து வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து நாட்டுக்கு திரும்புகின்றனர்.
வங்க தேச கிரிக்கெட் அணியினர் தற்போது நியுஜிலாந்து நாட்டில் சுற்றுபயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்று நியூஜிலாந்து நாட்டின் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மஸ்ஜித் அல் நூர் என்னும் மசூதியில் தொழுகை நடத்த சில வங்க தேச வீரர்கள் சென்றுள்ளனர்.
வங்கதேச வீரர்கள் சென்ற போது மசூதியினுள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. காயமடைந்தோரின் கதறல் ஒலியும் ஒலிக்கவே வஙக தேச வீரர்கள் அதிர்ந்தனர். அவர்களை காவல்துறையினர் காப்பாற்றி மீண்டும் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்
இந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஏராளமான வெடிகுண்டுகளுடன் வாகனங்களும் பிடிபட்டுள்ளன. இந்த தாக்குதல் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடந்துள்ளது.
வங்க தேச கிரிக்கெட் அணி மேலாளர் கலீல் மஷுத், “தாக்குதல் நடந்த போது நாங்கள் மசூதியில் இருந்து சுமார் 50 கஜம் தொலைவில் இருந்தோம். அதிருஷ்டவசமாக தப்பித்தோம். ஒரு மூன்று அல்லது நான்கு நிமிடம் முன்னதாக நாங்கள் சென்றிருந்தால் நாங்களும் மசூதியின் உள்ளே சிக்கி இருப்போம்.
இந்த நிகழ்வால் எங்கள் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அஹனால் நாங்கள் இந்த பயணத்தை இத்துடன் முடிந்துக் கொள்கிறோம். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் எங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.