கமதாபாத்

குஜராத் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களில் ரூ. 1.06 கோடி மது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்

பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலில் உள்ளது.    ஆயினும் அண்டை மாநிலங்களில் இருந்து மது கடத்தி வரப்பட்டு இங்கு தங்கு தடையின்றி கிடைப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றன.   இதை ஆளும் பாஜக மறுத்து வருகிறது.    தற்போது எதிர்க்கட்சிகளின் புகாரை உறுதிப்படுத்தும்படி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.   தற்போது அரசு அதிகாரிகள் தொடர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   பொதுமக்கள் ஆவணமின்றி பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஆவணங்களுடன் ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 1 கிலோ தங்கம் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.

குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி முரளி கிருஷ்ணா செய்தியாளர்களிடம், “காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் மதுவிலக்கு குறித்த சோத்னைகள் நடைபெறுகின்றன.    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மூன்று தினங்களில் 2256 மதுவிலக்கு மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  அத்துடன் 1827 பேர் கைது செய்யப்பட்டுனர்.

இந்தியாவில் தயாராகும் அயல்நாட்டு மதுபானம் சுமார் 31885 லிட்டர்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   சராசரியாக தினமும் 10000 லிட்டருக்கு மேல் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு ரூ.1.06 கோடி ஆகும்.  அதை தவிர 1.86 லட்சம் லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஆர்வலர் ஒருவர், “தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்தபிறகு இவ்வளவு மதுபானம் பிடிக்கப்பட்டுள்ளது.   அப்படியானால் அதற்கு முன்பு புழக்கத்தில் ஏராளமான மதுபானம் இருந்திருக்கும்.   மதுவிலக்கு அமுலில் உள்ள மாநிலத்தில் தாராளமாக மது விற்பனை ஆகிறது என்பது இதன் மூலம் உறுதி ஆகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.