ஜெமினி ஸ்டுடியோ அதிபரான எஸ் எஸ் வாசன் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். திரைப்படத்தில் விறுவிறுப்புக்காக எதையும் செய்பவர். ரயில்வே கைட் புத்தகத்தில் கூட ஒரு வித விறுவிறுப்பு தன்மையை உண்டாக்க வல்லவர் என்று எஸ் எஸ் வாசனை பற்றி எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு முறை கூறியுள்ளார்.
வாசன் கதையைப் பாதியில் மாற்றுவது குறித்துக் கவலைப்பட்டதில்லை. கதையைச் சுவாரசியமாக்க ஏதும் சேர்க்க வேண்டும் என்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான அடிகள் எடுத்த திரைப்படத்தைக் கூட பல முறை உதாசீனப் படுத்துவார்.
சந்திரலேகா படப்பிடிப்பின் போது படத்தில் மக்களுக்கு மகிழ்வூட்டும் படி படம் அமையவில்லை என வாசன் நினைத்தார். அதனால் அந்தக் கதையில் சர்க்கஸ் ஒன்றை இணைத்து, அவருடைய மவுண்ட் ரோடு ஸ்டூடியோவில் இதற்காக இரு சர்க்கஸ் நிறுவனங்களை முகாமிட வைத்தார். (அவற்றில் ஒன்று தனது பெயரை ஜெமினி சர்க்கஸ் என மாற்றிக் கொண்டது வேறு கதை)
அவர் தனது இந்தி திரைப்படமான இன்சானியத் என்னும் படத்தைச் சென்னையில் தயாரித்தபோது அதில் மாபெரும் நட்சத்திரங்களான திலீப் குமார், தேவ் ஆனந்த் மற்றும் பினா ராய் இருந்த போதும் விறுவிறுப்பு இல்லை என நினைத்தார். பாதி எடுக்கப்பட்ட அந்த படத்தில் ஒரு சிம்பன்சி குரங்கையும் நடிக்க வைக்க முடிவு செய்தார்.
அப்போது அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த ஜிப்பி எனும் மனிதக் குரங்கு பற்றிய செய்திகளை வாசன் கேள்விப்பட்டார். ஜிப்பி பியானோ வாசிப்பது. ரோலர் ஸ்கேட்டிங் செய்வது, அவ்வளவு ஏன் தட்டச்சு செய்வதிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தது. மாதத்துக்கு அது 55,000 டாலர் ஊதியம் பெற்று வந்தது. அதற்கு முந்தைய வருடம் டார்சான்ஸ் ஹிட்டன் ஜங்கிள் (TARZAN’S HIDDEN JUNGLE) என்னும் ஆங்கிலப் படத்தில் சீட்டா என்னும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்த ஜிப்பி குறித்து லைஃப் பத்திரிகையில் முழு பக்க கட்டுரை வெளியாகி இருந்தது.
எஸ் எஸ் வாசனை பொறுத்த வரை முடியாதது என எதுவும் இல்லை. அந்த மாதம் முடிவதற்குள்ளேயே அவர் ஜிப்பியை ஒப்பந்தம் செய்தார்.
ஜிப்பி மீனம்பாக்கம் வந்து இறங்கியதுமே ஜெமினி விளம்பர இலாகா அதற்கு நல்ல விளம்பரம் செய்யத் தொடங்கியது. கதாநாயகி மோகனா மாலை அணிவித்து வரவேற்க ஜிப்பி அவரை முத்தமிட்டது. இவை அனைத்தும் படமாக்கப்பட்டு இந்த புகைப்படங்கள் அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. மனிதர்கள் போல் உடைகளும் காலணியும் அணிந்திருந்த ஜிப்பி மக்களிடம் கை குலுக்கி மகிழ்வித்தது.
ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சி. ஜிப்பியின் உயரம் 18 அங்குலங்கள் மட்டுமே. வாசன் அதனால் தயங்கவில்லை. ஜிப்பி நடிக்கும் காட்சிகளைக் கண்களின் மட்டத்துக்குக் கீழிருந்து படமாக்கச் சொன்னார். அதனால் மக்களுக்கு ஒரு சிறிய உருவமாக ஜிப்பி தெரியவில்லை.
கதாசிரியர்கள் ஏற்கனவே இரு மாபெரும் நட்சத்திரங்களுக்காக கதையை எழுதி இருந்தனர். தற்போது ஜிப்பிக்காக நகைச்சுவை பகுதி அதிகரிக்கப்பட்டு இரு பாடல் காட்சிகள் கதையில் சேர்க்கப்பட்டது.
ஜிப்பி சென்னையில் தங்கி இருந்தபோது பல பெரிய மனிதர்கள் ஜிப்பியை காணவும் அதனுடன் புகைப்படம் எடுத்து தங்கள் வீட்டு வரவேற்பறையில் மாட்டவும் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்.
ஜிப்பியினால் இந்த படத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் வந்ததால் தொடர்ந்து அரங்கம் நிரம்பியது. ஆனால் கதாநாயகர்கள் முழுவதுமாக பின் தள்ளப்பட்டனர். இது நடந்து பல ஆண்டுகள் பிறகு தேவ் ஆனந்த் ஒரு பேட்டியில், “இந்த படத்தின் அனுபவம் நான் மறக்க முயல்கின்ற ஒன்று” என தெரிவித்திருந்தார்.
-வெங்கடேஷ்