பாலியா: உத்திரப்பிரதேச மாநிலத்தில், முதன்மை மருத்துவ அதிகாரி ஒருவர், துப்புரவு தொழிலாளியின் காலை சுத்தம் செய்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவ, தற்போது அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், கால்கள் கழுவிவிடப்பட்ட அந்த துப்புரவு தொழிலாளிக்கு, பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதுதான்.
டாக்ர்.உமாபதி திவிவேதி என்ற அந்த அதிகாரி, மருத்துவமனையில் பணிபுரியும் அந்த ஊதியம் வழங்கப்படாத துப்புரவு தொழிலாளியை தனது இல்லத்திற்கு வரவழைத்து, அலகாபாத் கும்பமேளாவில் பிரதமர் மோடி செய்ததைப் போன்று, அவரின் கால்களை சுத்தம் செய்தார்.
இந்த செயலை, அதிகாரிக்கு வேண்டப்பட்ட யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரவச்செய்துவிட்டார். விளைவு, அதிகாரியின் பதவிக்கு வேட்டு..!
சம்பந்தப்பட்ட தொழிலாளரின் நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தருவதற்கு, இந்த முதன்மை மருத்துவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
– மதுரை மாயாண்டி