பீஜிங்: சீனாவில் தனது மூன்றாவது ஐ.டி. வளாகத்தை கட்டமைத்து வருகிறது இந்தியா. இரு நாடுகளுக்குமிடையிலான துறைசார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைகிறது.

இந்தியாவின் நாஸ்காம் நிறுவனம் (National Association of Software and Services Companies) மற்றும் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் அமைந்த சூஸு நகரத்துடன் ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்த வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, டாலியன் மற்றும் குய்யாங் ஆகிய நகரங்களில், சீனாவின் வளர்ந்துவரும் ஐ.டி. தொழில்துறையை மேம்படுத்தும் வகையில், இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, வளாகங்கள் அமைக்கப்பட்டன.

தற்போது அமைக்கப்பட்டுவரும் புதிய வளாகத்தின் மூலம் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை அளவிற்கு ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஏற்கனவே அமைக்கப்பட்ட டாலியன் மற்றும் குய்யாங் ஆகிய வளாகங்களின் மூலம் முறையே 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் 8.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் நடந்து வருகிறது.

இந்தப் புதிய ஐ.டி. வளாகங்களின் மூலம் இந்தியா – சீனா இடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருகிறது. இருநாட்டு நிறுவனங்களுக்குமிடையே ஒரு சிறந்த கூட்டுழைப்பை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வளாகம் அமைக்கப்பட்டுவரும் சூஸு நகரம், சீன நாட்டின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி