சென்னை:

ரே நேரத்தில் இரு கட்சிகளுடன் திரைமறைவில் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய தேமுதிக வின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி யின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தேமுதிகவின் நடவடிக்கைகளை கடுமையாக சாடி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுக தலைமையின் கீழ் 9 கட்சிகளை கொண்ட மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் கொங்குநாடு மக்கள்தேசிய கட்சியும் இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. உதய சூரியன் சின்னத்தில் அந்த கட்சி போட்டியிட இருக்கிறது.

இந்த நிலையில், தேமுதிக அதிமுக, திமுக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேரம் நடத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதுதொடர்பாக தேமுதிகவை அனைத்து தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தேமுதிகவின் நடவடிக்கை குறித்து  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில், . “வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக் காகத் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுடன் மற்ற அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வரும் நிலையில், தே.மு.தி.க-வைக் கூட்டணியில் கொண்டு வருவதற்கு அ.தி.மு.க – தே.மு.தி.க இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை நாம் அறிவோம்.

ஆனால், கடந்த சில நாள்களாக இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் நிகழ்வு தமிழக மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஏதோ வியாபாரத்தில் இடைத்தரகர்கள் செய்யும் வியாபார உத்தியைப்போல கூட்டணி பேரத்தை அ.தி.மு.க – தே.மு.தி.க ஆகிய இரண்டு கட்சிகளும் மாறிமாறி அரங்கேற்றி வருவது தமிழக அரசியலுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லதல்ல.

தே.மு.தி.க தங்களுடைய கூட்டணி பேரத்தை அதிகரிக்க என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் செய்வார்கள் என்பதைக் கடந்த சில தினங்களாக நடக்கும் நிகழ்வு வெளிக்காட்டியிருக்கிறது.

அரசியல் நாகரிகம் துளியும் இல்லாமல், பேர அரசியலைக் கொண்டு இவ்விரு கட்சிகளும் அமைக்கும் கூட்டணி எப்படி மக்கள் நலம் சார்ந்த கூட்டணியாக இருக்க முடியும். தமிழக மக்களுக்குப் போதிய அளவில் அரசியல் விழிப்புணர்வு இல்லை என்று இவ்விரு கட்சிகளும் கருதுகிறார்கள்.

இவ்விரு கட்சிகளும் அமைக்கும் வியாபார அரசியல் கூட்டணிக்குத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பதிலடியைக் கொடுப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.