டில்லி:
ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. உச்சநீதி மன்ற விசாரணையின்போது திருடப் பட்டதாக கூறிய நிலையில், பின்னர் நகல் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று மாற்றி மாற்றி பேசும் அட்டர்னி ஜெனரலின் பேச்சு, மத்திய அரசு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இந்தநிலையில், ரஃபேல் ஆவணங்கள் புதன்கிழமை திருடப்பட்டுள்ளது, வெள்ளிக்கிழமை நகல் எடுக்கப்பட்டுள்ளது, ஒருவேளை திருடிய ஆவணங்களை திருடன் வியாழக்கிழமை திருப்பி வைத்துவிட்டானோ? – என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரமாக காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட சீராய்பு மனுக்கள் மீதான விசாரணையின்போது, பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று பத்திரிகைகள் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், தற்போது, ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை என்றார். ஆனால், அந்த ஆவணங்களை திருட்டுத் தனமாக நகல் எடுக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து ப.சிதம்பரம் நக்கல் செய்து டிவிட் செய்துள்ளார்.