சென்னை: 

தவி ஆசைக்காக தொண்டர்களின் ரத்தத்தை விலைபேசுகிறார் பிரேமலதா என்று தேமுதிக நிர்வாகி மணலி பவுல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, ஒரே நேரத்தில் அ.தி.மு.க  மற்றும்  தி.மு.கவுடன் பேரம் பேசிய விஜயகாந்த் கட்சியினரின் நடவடிக்கையை திமுக பொருளாளர் துரைமுருகன் நடுரோட்டில் போட்டு உடைத்து விட்டதால், தேமுதிகவின் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாது.

அ.தி.மு.க உடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா வின் பண பேராசை  மற்றும் நிபந்தனைகள் காரணமாக தேமுதிக உடனான கூட்டணி இழுபறியாகி வருகிறது. ஏற்கனவே பா.ஜ.க அமைச்சர் பியூஷ் கோயல் கூட்டணி தொடர்பாக பேச போய், நிபந்தனைகளை கேட்டு அரண்டு போய் ஓடி வந்தவர் மீண்டும் அந்த பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.

தேமுதிக தரப்பு பா.ம.க.வை விட அதிக சீட்டு கேட்டுள்ளனர், அதிமுக தரப்பு 4 சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என கூறியிருக்கிறது. இதனால் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. இதற்கிடையில், ஸ்டாலினும் நேரில் சென்று பேச… பிடிகொடுக்காமல் பேசினார். இந்த நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கி கூட்டணியை நிறைவு செய்து விட்டது.

அதே சமயம் அதிமுகவும் இறங்கி வராத நிலையில், தே.மு.தி.க.வினர் சிலர்  தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இடமில்லை என்று கூறி திமுக கதவை அடைத்துவிட்டது.

இதன் காரணமாக கடுமையான ஆத்திரம் கொண்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா, நேற்று செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் போன்றோரை கடுமையாக விமர்சித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அதிமுக எம்.பி.க்கள் வேஸ்ட் என்று பேசியவர், அதிமுகவுடன் தான் கூட்டணி  என்றும் இரண்டு நாட்களில் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நோய்வாய்ப்பட்டு செயல்படாத நிலையில், பிரேமலதாதான் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஏற்கனவே தேமுதிக நிர்வாகிகளிடம் பணம் பணம என்று நச்சரிப்பதாக அவர்மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஏராளமான தேமுதிக நிர்வாகிகள் விட்டால்போதும் என்று கட்சியைவிட்டு தலை தெறிக்க ஓடிவிட்டனர்.

சென்னையில் தேமுதிகவுக்கு மாபெரும் பலமாக இருந்த வடசென்னை தேமுதிக பொறுப்பாளர் யுவராஜ், பிரேமலதாவின் நடவடிக்கை காரணமாகவே அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இந்த நிலையில், மணலி பகுதியை சேர்ந்த தேமுதிக நிர்வாகி பவுல்ராஜ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் கட்சியை ஆக்கிரமித்துள்ள அவரது குடும்பத்தினருக்கு பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தநிலையில்சென்னை மணலி தே.மு.தி.க. நிர்வாகி விஜய் பவுல்ராஜா தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பி உள்ள நிலையில், அத்துடன், விஜயகாந்த், பிரேமலதா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில், விஜயகாந்தின் திரைப்பட நடிப்பை உண்மை என நம்பி ஏமாந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்றும், உங்களின் கொள்கைகள் மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்பி, 1999ம் ஆண்டு முதல் விஜயகாந்த்  ரசிகர் மன்றத்தில் இணைந்து, நேற்று வரை சுமார் 30 ஆண்டுகள்  உங்களுடன் பயணித்ததை எண்ணி வெட்கப்படுகிறேன், வேதனை அடைகிறேன்.

தங்களின் பேச்சான,  அரசியலில் பிழைக்க வரவில்லை. உழைக்க வந்தேன் என்பதை நம்பி உங்களுக்காக களத்தில் இறங்கி அரசியல் பணியாற்றி வந்தேன். ஆனால்,  உங்களின் தற்போதைய உழைப்பை பார்க்கம்போது,  நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, ஒரே நேரத்தில்  அதிமுக., திமுக கட்சிகளுடன் பேரம்  பேசி லட்சக்கணக்கான தேமுதிக  தொண்டர்களின் கனவையும், உழைப்பையும், ரத்தத்தையும், வியர்வையும் விற்பனை செய்ய முயற்சி செய்தது ஆற்றாத துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொண்டர்களின்  ரத்தத்தை நல்ல விலைக்கு விற்க முயற்சி மேற்கொண்டீர்கள்… இது தேமுதிக தொண்டர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்… நீங்கள் குணமடைய பிரார்த்தனை செய்த தொண்டர்களுக்கு நீங்கள் செய்த கைமாறு இதுதானா?

மக்களுக்காக பொதுவாழ்வுக்கு வந்ததாக கூறிய நீங்கள், தற்போது பதவி ஆசைக்கு மயங்குவது ஏன்? வருங்காலமாவது, உங்களை நம்பியவர்களை அடகு வைத்துத் தேர்தல் கூட்டணி பேசாதீர்கள். அது தமிழகமக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்,  உங்களிடம் கேள்வி கேட்க உரிமை உண்டு என்பதால் சில கேள்விகளை எழுப்புகிறேன்…

அ.தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக மா.பா. பாண்டியராஜன் இருந்தால் உங்களின் நிலை என்ன?

தி.மு.க.வில் தேர்தல் பொறுப்புக்குழு தலைவராக ஈரோடு சந்திரகுமார் மற்றும் பி.எச். சேகர் இருந்திருந்தால் நீங்கள் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருப்பீர்களா?

உங்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இனியும் உங்களின் நடிப்பை நம்பி ஏமாற தயாராய் இல்லாததால் தே.மு.தி.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்’.

இவ்வாறு பவுல்ராஜ் தனது கடிதத்தில் எழுதி உள்ளார்.

பிரேமலதாவின் அரசியல் பேரம் காரணமாக, தேமுதிக நிர்வாகிகள் பலர் அதிருப்தியாக உள்ள நிலையில், மணலி பவுல்ராஜ் தனது பதவியை விலகி, தேமுதிகவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பவுல்ராஜ் விலகல் தேமுதிக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் மேலும் பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடம்பெயருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.