இம்பால்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதற்கு, பாரதீய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற வடகிழக்கு மாநிலங்களுக்கான பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ராம் மாதவ் கூறியதாவது, “கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ஒற்றுமையும் கண்ணியமும் வாய்ந்த இந்தியாவை உருவாக்கியுள்ளது பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சி.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களை வெல்வதற்கான இலக்கை நிர்ணயித்துள்ளோம். மேலும், மணிப்பூர் மாநிலத்திலுள்ள 2 நாடாளுமன்ற இடங்களையும் கைப்பற்றுவோம்.
உலகின் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் திகழ்கிறது. தற்போது 7.2% என்ற வளர்ச்சி விகிதத்தை அடைந்துள்ளோம். அந்த வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் 8% என்ற அளவிற்கு உயரும்” என்று தெரிவித்தார்.
– மதுரை மாயாண்டி