டில்லி:

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம் 3-ந்  தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்க முன்னர் புதிய பாராளுமன்றம் அமைய வேண்டும். ஆனால், தேர்தல் ஆணை யம், தேர்தல் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதே வேளையில் பிரதமர் மோடி மாநிலந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வாக்குகளை பெறும் நோக்கில்  பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில்,பிரதமர் மோடி தன்னுடைய நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் முடிக்கும் வரையில் தேர்தல் அறிவிக்க மாட்டீர்களா? மத்திய அரசு தேர்தல் அறிவிப்பை தாமதப்படுத்த உத்தர விட்டுள்ளதா? என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியது.

இதன் காரணமாக, இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்து வருகிறது. ஏற்கனவே மார்ச் 7ந்தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் பரவியது. ஆனால், இன்று வரை அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்றும், தேர்தலை நடத்த அனைத்து நிலையிலும் தேர்தல் ஆணையம் தயாராக  இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பல கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரலில் தொடங்கி, மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, முடிவுகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.