சென்னை:
திமுக பொருளாளர் துரைமுருகனை தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தோம், கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்று தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கடுமையாக சாடினார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணிகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேசிய வந்த நிலையில், திடீரென திமுக கூட்டணியில் இடம் கிடைக்குமா என நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர்.
ஒரே சமயத்தில் இரு கட்சிகளிடம் தேமுதிக கூட்டணி குறித்து பேசிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில், திமுக கூட்டணியில் இடம் இல்லை என்று கைவிரிக்கப்பட்டது. அதுபோல, அதிமுக கூட்டணியும் தேமுதிகவின் கோரிக்கைகளை ஏற்க முன்வராத நிலையில், நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை.
சமீபகால தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில், நேற்றைய கூட்டணி தொடர்பான நடவடிக்கைகள் பெரும் பரபரப்பையும், விஜயகாந்த் மீதான மதிப்பையும் குழிதோண்டி புதைத்துவிட்டது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்றது என்ன என்பது குறித்து, தேமுதிக துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,
திமுக பொருளாளர் துரைமுருகனை மரியாதை நிமித்தமாகவும், தனிப்பட்ட காரணங்களுக் காகவே துரைமுருகனை சந்திக்க சென்றோம் என்று கூறினார்.
துரைமுருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்த சுதீஷ், துரைமுருகன் பொய் கூறுகிறாரா? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய இளங்கோவன், எல்.கே.சுதீஷ் அதிமுகவுடன் பேசச் சென்றது எனக்கு தெரியாது அதுபோல, நாங்கள் துரைமுருகனை சந்திக்க சென்றது சுதீசுக்கு தெரியாது என்றும் மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அனகாபுத்தூர் முருகேசன், நாங்கள் அரசியல் காரணங்களுக்காக துரைமுருகனை சென்று சந்திக்கவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய சுதீஷ், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பா.ஜ.கவுடன் தான் முதலில் பேசினோம் என்றவர், அதிமுகவுடன் பேசுமாறு பா.ஜ.க கூறியதால் நாங்கள் சற்று தாமதமாக பேசினோம் என்றவர், பா.ம.கவுடன் உடன்பாடு ஏற்பட்ட சமயத்தில் தேமுதிகவுடனும் பேசியிருக்கலாம் என்று அங்கலாய்த்தார்.
பா.ம.க – அதிமுக கூட்டணி உறுதியானதால் எங்களை கூட்டணிக்கு வருமாறு திமுக அழைத்தது என்றவர், சில நாட்களுக்கு முன்னர் துரைமுருகனுடன் கூட்டணி குறித்து பேசியது உண்மை என்றவர், கூட்டணி தொடர்பாக பேசிய விவரங்களை நாங்கள் வெளியிடமாட்டோம் என்றார்.
அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டதற்கு, துரைமுருகன் என்னிடம் என்ன என்ன பேசினார் என்று தெரியுமா? என்று கேள்வி எழுப்பியவர், துரைமுருகன் கட்சியை பற்றியும், திமுக தலைமையை பற்றியும் பேசியதை சொன்னால் அசிங்கமாகிவிடும், நாகரிகம் கருதி துரை ுருகன் திமுக குறித்தும், திமுக தலைமை குறித்து பேசியதை நான் வெளியிட மாட்டேன் என்றார்.
மேலும், அதிமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சரமாரியாக பல்வேறு கேள்வி எழுப்பினர். அதை எதிர்கொள்ள முடியாமல், செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு சுதீஷ் கிளம்பினார்.