லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் வியாபாரம் செய்து வரும் காஷ்மீர் மாநிலத்தவர்களை, அங்குள்ள இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 14ந்தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கர வாத தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப் பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் காஷ்மீர் மாநில மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது.
பல மாநிலங்களில் படித்து வரும் காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றமும் மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையிலும், பாஜக ஆளும் மாநிலங்களில், காஷ்மீரிகள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், யோகி ஆதித்யா ஆட்சி செய்து வரும், உ.பி. மாநில தலைநகரான லக்னோவில், சாலையில் உலர் பழங்கள் விறற்பனை செய்து வந்த காஷ்மீர் மாநில வியாபாரிகளை இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர் தடியால் தாக்கி விரட்டியடிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சாலையோரம் வியாபாரம் செய்து வந்த 2 காஷ்மீர் வியாபாரிகளை, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், விரட்டியடித்து தாக்குகின்றனர்.. அடி வாங்கும் நபர் தனது தலையில் கையை வைத்து தாக்குதல்காரர்களிடம் அடிப்பதை நிறுத்தமாறு கெஞ்சுகிறார். நீங்கள் காஷ்மீரிகள் என்பதாலே தாக்குகிறோம் என்று கூறி அவர்களை விரட்டுகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வழக்கு பதியப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.