டில்லி

ஃபேல் ஒப்பந்தத்தின் உண்மையான ஆவணங்கள் வெளியானதால் மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நேற்று பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்த ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் திருட்டு போய்விட்டதாகவும் அதில் உள்ள விவரங்களை இந்து நாளிதழ் வெளியிட்டது குற்றம் எனவும் நீதிமன்றத்துக்கு எதிரானது எனவும் உச்சநீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த இந்து அதிபர் என் ராம் தாம் ஆவணங்களை திருடவில்லை எனவும் அரசு அந்த ஆவணங்கள் பொய் என ஒப்புக் கொள்ளாததால் தமது செய்தி உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி ரஃபேல் பேரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு இணையாக பிரதமர் அலுவலகம் தனித்து பேரம் நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சக பேச்சு வார்த்தைகள் கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவிக்கபட்டிருந்தது. அத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசின் சிபாரிசுக்கு இணங்க பிரஞ்சு நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “மோடியை காப்பாற்ற ஆவணங்கள் திருட்டு போனதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆவணங்கள் திருடப்படவில்லை என்பதை பத்திரிகை தரப்பு தெளிவு படுத்தியுள்ள்து. அத்துடன் அந்த ஆவணங்கள் உண்மை என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. எனவே பிரதமர் மோடி உட்பட இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தொடர்புள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.