டில்லி:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று முதல் உச்சநீதிமன்ற ஓப்பன் கோர்ட்டில் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டது. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தில் பிரபல வழக்கறிஞர் மனோகர்லால் சர்மா, பிரசாத் பூஷன் உள்பட முன்னாள் பாஜக அமைச்சர்களான யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி போன்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் மீது பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று முடிந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 14ந்தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், , ரஃபேல் விமானம் வாங்குவதில் அரசின் கொள்ளை முடிவு சரியானது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கின் விசாரணையின் போது முக்கிய ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வில்லை என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தனர்.
‘இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம், இன்று முதல் மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்று அறிவித்து உள்ளது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை ஓபன் – கோர்ட்டில் நடத்தப்பட இருக்கிறது. ஓபன் – கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணையை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.