வேறு வழியே இல்லாத சூழலில்தான் ஒரே ஒரு லோக்சபா தொகுதிக்கு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ ஒப்புக்கொண்டுள்ளார்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து வைகோ ம.தி.மு.க.வை தொடங்கிய போது தி.மு.க.வின் 9 மாவட்ட செயலாளர்கள் அவருக்கு துணையாக இருந்தனர்.எம்.ஜி.ருடன் கூட இத்தனை பேர் வந்ததில்லை.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் அவர் சந்தித்த சோதனைகள் ரொம்பவும் அதிகம்.

ஓர் இருவரை தவிர உடன் வந்த மாவட்ட செயலாளர்கள் எல்லாம் மீண்டும் தி.மு.க.வில் ஐக்கிய மாகி விட்டனர். கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் என மூத்த தலைவர்களும் அவரை நடு ரோட்டில் கை விட்டு தாய் கட்சியில் இணைந்து விட்டனர்.

அவருக்கு பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் புதிய உயரங்களை தொட்டுவிட்ட நிலையில்- கட்சியின் அங்கீகாரத்தை கூட காப்பாற்ற முடியாத இக்கட்டில் சிக்கினார்-வைகோ.

கட்சி ஆரம்பித்த புதிதில் குடை சின்னத்தில் போட்டியிட்டார். பின்னர் பம்பரம் சின்னம். கடைசி இரண்டு தேர்தல்களில் –தேர்தல் கமிஷன் வகுத்த விதிகளின் படி வாக்குகளை பெற முடியாததால் பம்பரமும் பறி போக- நிலை குலைந்து போனார் .

கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி அமைத்து போட்டியிட்ட போது ம.தி.மு.க.வுக்கு கிடைத்த ஓட்டு சதவீதம் என்ன தெரியுமா? வெறும் 0.9% .

கட்சியின் அங்கீகாரத்தை மீட்டு எடுப்பதற்காகவே வைகோ –ஒரு லோக்சபா தொகுதிக்கு- சம்மதித்துள்ளார். உடனடியாக கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும் அடுத்த சட்டசபை தேர்தலில் பெறும் வெற்றிகள் மூலம் அது சாத்தியமாகும். தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்ய உள்ள வைகோவுக்கு  ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்க மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார்.

1978 ஆம் ஆண்டு முதல் 1996 வரை  வைகோ ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். அதன் பின் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் ராஜ்யசபாவுக்கு செல்லப் போகிறார்.

அவரை டெல்லி மேல்சபைக்கு அனுப்பவிருக்கும் ராஜ்யசபா தேர்தல் –வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

—பாப்பாங்குளம் பாரதி