ஷிவமோகா: கற்பனையில் படித்து, கேட்டு மற்றும் பார்த்து ரசித்த ஒரு ரயில் நிலையம், நிஜமாகி வந்தால் எப்படியிருக்கும்!!? ஆம். அதுதான் இப்போது நடக்கப்போகிறது.
மறைந்த பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனின் ‘மால்குடி டேஸ்’ கதைகள் மிகப் பிரபலம். அந்தக் கதைகள், சங்கர் நாக் என்பவரால், ஒரு தொலைக்காட்சித் தொடராக இயக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில், ஷிவமோகா – தலகுப்பா ஆகிய இடங்களை இணைக்கும் ரயில் பாதையில் அமைந்திருக்கும் ரயில் நிலையமான அரசலு ரயில் நிலையம்தான், தற்போது மால்குடி ரயில் நிலையம் என்று பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளது. இது, கர்நாடக மாநிலத்தின் ஹோசாநகர் தாலுகாவில் அமைந்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில்தான், அந்த தொலைக்காட்சித் தொடரின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. எனவே, அந்தப் புகழ்பெற்ற இயக்குநரை கவுரவிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மோசமான பழைய நிலையிலிருக்கும் இந்த ரயில் நிலையம் புதுப்பிக்கப்படுவதோடு, மால்குடி டேஸ் என்ற பெயரில் ஒரு அருங்காட்சியகமும், அந்த ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘மால்குடி டேஸ்’ பிரியர்களுக்கு, ஒரு முறையேனும் அந்த ரயில் நிலையம் சென்றுவர வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக எழும் என நம்பலாம்!
கடந்த 2011ம் ஆண்டு, கர்நாடகாவின் யஷ்வந்த்ப்பூர் – மைசூரு இடையே செல்லும் ரயிலின் பெயர், ‘மால்குடி எக்ஸ்பிரஸ்’ என்று மாற்றப்பட்டது இந்த இடத்தில் நினைவுகூறத்தக்கது.
– மதுரை மாயாண்டி