லாகூர்: இந்துக்கள் பசு மூத்திரம் குடிக்கும் மக்கள் என மோசமாக விமர்சம் செய்த பாகிஸ்தான் அமைச்சருக்கு, அவரது கட்சி மற்றும் அரசிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் தகவல்தொடர்பு மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஃபயாசுல் ஹசன் சோஹன், ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “ஓ, பசு மூத்திரம் குடிக்கும் இந்துக்களே, நாங்களெல்லாம் முஸ்லீம்கள். எங்களிடம் கொடி உள்ளது. அது தைரியம் மற்றும் துணிச்சலுக்கான அடையாளம்!
எங்களைவிட மேலானவர்களாய் உங்களை எண்ணிக் கொள்ளாதீர்கள். விக்கிரகங்களை வணங்குவோரே, எங்களிடம் என்ன உள்ளதோ, அது உங்களிடம் இல்லை” என்று கடுமையான துவேஷத்தை உமிழ்ந்தார்.
அவரின் இந்தக் கருத்துக்கு, சொந்தக் கட்சியிலிருந்தும் அரசிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த அமைச்சர், பாகிஸ்தான் ஆளுங்கட்சியான பிரதமர் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியை சேர்ந்தவர். சிறுபான்மையினர் மற்றும் மாற்று மதத்தவரின் உணர்வுகள் மற்றும் உரிமைகளை தாக்குவதற்கு எவருக்கும் உரிமையில்லை. ஃபயாசுல் ஹசன் பேச்சின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, மாநில முதலமைச்சருடன் பேசி முடிவுசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் விவகாரங்கள் விஷயத்தில், பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருக்கும் நயீமுல் ஹேக், இப்பேச்சு தொடர்பாக தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
– மதுரை மாயாண்டி