திருவனந்தபுரம்: கேரள அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கேரளா திருச்சபை (சொத்துக்கள் மற்றும் நிறுவனம்) மசோதா, பல கிறிஸ்தவ தலைவர்களின் எதிர்ப்பை பெற்றபோதும், அம்மாநில கூட்டு கிறிஸ்தவக் கவுன்சிலின் (JCC) வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த அமைப்பின் சார்பாக கூறப்பட்டுள்ளதாவது, “இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், திருச்சபை நிர்வாகம் ஜனநாயகமயமாவதை விரும்பாதவர்கள். சிலர் கூறுவதைப்போல், இந்த மசோதா, திருச்சபை நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிக்காது.
திருச்சபையின் சொத்து பரிவர்த்தனை தொடர்பான அனைத்தையும் தணிக்கை செய்ய கோருவதோடு, சொத்துக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஒரு தீர்ப்பாயத்தை அமைப்பதற்கு இந்த மசோதா பரிந்துரை செய்கிறது.
மேலும், கேரள சட்ட சீர்திருத்த கமிஷனால் வெளியிடப்பட்டுள்ள இந்த 2019ம் ஆண்டு மசோதா, கடந்த 2009ம் ஆண்டின் கேரள கிறிஸ்தவ திருச்சபை சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் ஒரு வலிமை குன்றிய வடிவம்தானே ஒழிய, வேறில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி