பாரமுல்லா: காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவிலுள்ள இந்து பண்டிட்டுகளின் கடைகளை, அவர்கள் வெளியூர்களில் இருக்கும் நாட்களில், முஸ்லீம்கள் பொறுப்பாக கவனித்துக்கொண்டு வியாபாரம் நடத்தும் அதிசயத்தை காஷ்மீர் மாநிலத்தில் காண முடிகிறது.
பாரமுல்லா நகர மார்க்கெட்டில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு சொந்தமான பல கடைகள் இருக்கின்றன. மகா சிவராத்திரி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகளைக் கொண்டாட, ஜம்மு உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் சென்றுவிடுவார்கள் அந்தப் பண்டிட்டுகள். அவர்கள் திரும்பிவர, மாதக்கணக்கில்கூட ஆகலாம்.
ஆனால், அந்த நாட்களில், அவர்களுடைய கடைகள் ஆளில்லாமல் மூடப்பட்டிருக்கும் என்று மற்றவர்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. அவர்கள் இல்லாத நாட்களில், அவர்களின் கடைகளை உள்ளூர் முஸ்லீம்கள் கவனித்துக் கொள்கிறார்கள். இருதரப்பாரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் நம்புகின்றனர்.
அந்த மார்க்கெட்டில், பண்டிட்களுக்கு சொந்தமான ஜவுளி மற்றும் ஆயுர்வேத மருந்துக் கடைகள் உள்ளன. பாரமுல்லாவில் பண்டிட்டுகள் வாழும் தனியான காலனியும் உண்டு. தீவிரவாத செயல்களின் பின்விளைவால், கடந்த 1989ம் ஆண்டுகளில், பண்டிட்டுகள் காஷ்மீரைவிட்டு புலம்பெயர்ந்து சென்றதை, அங்குள்ள முஸ்லீம்கள் கொடுமையான சம்பவமாக நினைக்கின்றனர்.
பண்டிட்டுகள் – முஸ்லீம்களுக்கிடையிலான இந்த வியாபார ஒத்துழைப்பு, ஏதோ சமீபத்தில் ஏற்பட்டதல்ல; கடந்த பல்லாண்டுகளாகவே இருந்துவருகிறது. பாரமுல்லாவில் மொத்தம் 29 பண்டிட்டுகள் இதுபோன்று முஸ்லீமகளின் ஆதரவை நம்பி வாழ்கின்றனர். ஒரு முஸ்லீம் என்பவர் சன்னியோ அல்லது ஷியாவோ, அதுப் பற்றியெல்லாம் பிரச்சினையில்லை. பண்டிட்டைப் பொறுத்தவரை அவர் நம்பகமான மனிதர்! அவ்வளவே…
அரசியலால் எவ்வளவுதான் பிரச்சினைகள் எழுந்தாலும், இதுபோன்ற மனிதநேய நல்லிணக்கங்கள் எங்கும் இருக்கவே செய்கின்றன.
– மதுரை மாயாண்டி