சென்னை:
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க., கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அதிகாரப்பூர்வ மாக இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, அதிமுக கூட்டணியில் இணைய பல்வேறு கோரிக்கைகளை நிபந்தனைகளாக அறிவித்து இருந்தார். ஆனால், அதிமுக, பாஜக கிருஷ்ணசாமியை கண்டுகொள்ளாத நிலையில், அதிமுக பாஜக கூட்டணியை எச்சரிக்க தொடங்கினார்.
இந்த நிலையில், அவரது கோரிக்கையான,தேவேந்திர குல வேளாளர் இனத்தவரை, பட்டியல் இனத்தில் இருந்து மாற்றி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்ப்பது தொடர்பாகவும், பட்டியல் இனத்திலுள்ள ஆறு பிரிவுகளை ஒருங்கிணைப்பது குறித்தும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டு உள்ளது.
இதன் காரணமாக புதிய தமிழகம் அதிமுக கூட்டணியில் இணையும் என நம்பிக்கை ஏற்பட்டது. ஏற்கனவே அதிமுக தலைமையிலான தேர்தல் கூட்டணியில், பா.ம.க.பா.ஜ. இணைந்து விட்ட நிலையில், தேமுதிக, த.மா.காவுடனுன்ம பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று, அ.தி.மு.க., தலைமையகத் திற்கு வருகை தந்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இன்று அ.தி.மு.க., தலைமையகத்திற்கு வந்தார், அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய பின், லோக்சபா தேர்தலுக்கான அ.தி.மு.க., கூட்டணி யில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையொப்பம் இட்டனர்.
இதை தொடர்ந்து, தமிழகத்தில் நடைபெறவுள்ள, 21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலிலும், அ.தி.மு.க.,வுக்கு, புதிய தமிழகம் கட்சி ஆதரவளிக்கும் எனவும் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தவிர, புதிய தமிழகம் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.