வள்ளியூர்:

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கன்னியாகுமரி மாவட்ட எல்லையான காவல் கிணறு பகுதியில் போராட்டம் நடத்திய வைகோ உள்பட 403 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க பிரதமர் மோடி நேற்று கன்னியாகுமாரி வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.

நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கில், வைகோ தலைமையில் திரண்ட மதிமுகவினர், கருப்பு கொடி மற்றும் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது மோடியை ஆவேசமாக விமர்சித்த வைகோ, கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டார்.

இந்த நிலையில், ஆரப்பாட்டம் நடத்திய மதிமுகவினர் மீது பாஜகவினர் கற்களை எறிந்ததால், மோதல் உருவானது. கல் வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ கோ‌ஷங்கள் எழுப்பினார். கல்வீசிய மர்மநபர்களை பிடிக்க போலீசாரும் ஓடினர்.

அதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்பட அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்று, பின்னர்  மாலையில்  விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க.வினர் 403 பேர் மீது  வள்ளியூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.