டில்லி:
இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து டிடிவி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் என்று டில்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர், உடைந்த அதிமுக ஒட்டப்பட்டு ஒள்றான நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு விதிகள் திருத்தப்பட்டன.
அதைத்தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை இணைந்த ஓபிஎஸ் இபிஎஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டில்லி உயர்நீதி மன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று மதிய இடைவேளைக்கு பிறகு டில்லி உயர்நீதி மன்றம் இரட்டை இலை வழக்கில் தீர்ப்பு கூறியது.
தீர்ப்பில், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரியானதுதான் என்று கூறியது. அதையடுத்து, டிடிவி மற்றும் சசிகலாவின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
இந்த பரபரப்பான தீர்ப்பை நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்டானி, சங்கீதா திங்கரா செஹல் கொண்ட அமர்வு வழங்கியது.
இந்த தீர்ப்பு, டிடிவி அணியினருக்கு பெருத்த அடியாகவும், எடப்பாடி ஓபிஎஸ் அணியினரும் பெரும் வெற்றியாகும் அமைந்துள்ளது.