ஸ்லாமாபாத்

ந்திய விமானப்படை தாக்குதலை ஒட்டி பாகிஸ்தான் அரசு இந்திய திரைப்படங்களை அந்நாட்டில் திரையிட தடை விதித்துள்ளது.

காஷ்மீர் மாநில எல்லையில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்கள் மீது நேற்று இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்த முகாம்களும் அதில் இருந்த தீவிரவாதிகளும் அடியோடு அழிக்கப்பட்டனர். இதற்கு இந்தியத் தலைவர்களும் பல உலக நாட்டு தலைவர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். புல்வாமா தாக்குதல் நடந்து 12 ஆம் நாள் அன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை என பாகிஸ்தான் கூறி வந்தாலும் அதை உலக நாடுகள் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கேற்ப பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு விரைவில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க உள்ளதாக அறிவித்தது. அது மட்டுமின்றி இந்த தாக்குதலால் இந்தியாவுடனான கலாசார உறவுகளை முறித்துக் கொள்ளவும் பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் சவுத்ரி பவாத் ஹுசைன், “இந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் பாகிஸ்தான் திரையரங்கங்கள் எதிலும் இந்திய திரைப்படங்களை வெளியிடக் கூடாது. அத்துடன் பாகிஸ்தான் மின்னணு ஊடக கட்டுப்பாட்டு வாரியத்துக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறித்த விளம்பரங்கள் எதையும் ஒளிபரபக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த உடன் பல இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட போவதில்லை என அறிவித்துள்ளனர்.