ஹைதராபாத்:

வாக்காளர் அடையாள அட்டை  மற்றும் ஆதார் இணைப்பின் போது, தெலங்கானா மாநிலத்தில் 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும், ஆந்திராவில் 25 லட்சம் வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


தேசிய வாக்காளர் பட்டியல் புதுப்பிப்பு மற்றும் அங்கீகார திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது.

இதன் அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
அதேபோல், ஆந்திர மாநிலத்தில் 25 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப் போயின.

இது குறித்து ஸ்வச்சா என்ற அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆரம்பத்தில் 2014-ம் ஆண்டு முதல் நிஜாமாபாத் மற்றும் ஹைதராபாத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதனிடையே, வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. அப்போது, 30 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருந்தது.

இது, கடந்த டிசம்பர் மாதம் தெலங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்று கூறி ஏராளமானோர் புகார் செய்தனர்.

இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, வீடு,வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி நடக்கவில்லை என்பதையும், அதற்குரிய அதிகாரி யாரும் தங்கள் வீட்டுக்கு வரவில்லை என்றும் பொதுமக்களிடம் புகார் வந்துள்ளதாக அம்மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.