காபூல்
இந்திய விமானப்படை இன்று ஜெய்ஷ் ஈ முகமது முகாம் மீது தாக்குதல் நடத்திய இடத்தில் பாகிஸ்தான் 30 வருடங்களுக்கு மேலாக பயிற்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் கூறி உள்ளது.
.
புல்வாமா தாக்குதலை அடுத்து மேலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாமிட்டு பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து இந்தியா தகவல் அளித்து பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
அதை ஒட்டி இன்று இந்திய விமானப்படை 12 விமானங்களில் அந்தப் பகுதிக்கு சென்று குண்டு வீச்சு நடத்தியது. சுமார் 1000 கிலோ வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலை பல உலக நாடுகள் வரவேற்றுள்ளன.
இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டின் ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு முன்னாள் இயக்குனர் தவாப் கோர்ஸாங் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில். “இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத இயக்கத்தின் மீது நடத்திய தாக்குதலுக்கு நன்றி.
இந்த இடத்தில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜியா உல் ஹக் காலத்தில் இருந்து ஜிகாதி பயிற்சி முகாம்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது.
இது பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல். வேறு ஒன்றும் இல்லை.” என தவாப் குறிப்பிட்டுள்ளார்.
ஜியா உல் ஹக் கடந்த 1976 முதல் 1988 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்துள்ளார்.