சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், உதய சூரியன் சின்னத்தில் கொமதேக கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் சேர்ந்து விட்ட நிலையில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 2வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இன்றைய பேச்சு வார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையை தொடர்ந்து, கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், எந்த தொகுதி என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கூட்டணி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பணிபுரிவோம் என்றார்.  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1 தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும்,  21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் கூறினார்.