பார்சிலோனா

ந்திய தொலை தொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள சலுகைகளால் ரிலையன்சின் ஜியோ நிறுவனம் பயன் அடைந்துள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற சர்வதேச தொலை தொடர்பு நிறுவனமான வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் வெகுநாட்களாக மொபைல் சேவையை அளித்து வருகிறது. ஆனால் ரிலயன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் சேவையை தொடங்கியதும் அனைத்து மொபைல் நிறுவனங்களும் வர்த்தக ரீதியாக பின்னடைவை சந்தித்தது. இதை ஒட்டி ஐடியா நிறுவனமும் வோடஃபோன் நிறுவனமும் ஒன்றாக இணைந்தன.

இநிலையில் வோடஃபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீட் செய்தியாளர்களிடம், “இந்தியாவில் வோடஃபோன் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்ததால் நாங்கள் ஐடியா நிறுவனத்துடன் இணைந்தோம். ஆனால் எங்களுக்கு இன்னும் நஷ்டம் தொடர்கிறது.  எங்களுக்கு இந்திய தொலை தொடர்பு கட்டுப்பட்டு வாரியமான டிராய் நாங்கள் கேட்கும் எந்த சலுகையையும் அளிக்கவில்லை.

அதே நேரத்தில் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்துக்கு டிராய் சலுகைகள் அளித்து வருகிறது. மொத்தத்தில் டிராய் அளிக்கும் சலுகைகளால் ஜியோ மட்டுமே பலன் அடைந்து வருகிறது. நாங்கள் ஐடியா நிறுவனத்துடன் இணைவதற்கு ஏற்பாடுகள் செய்ய டிராயிடம் 4 வருடங்கள் அவகாசம் கேட்டிருந்தோம். ஆனால் எங்களுக்கு டிராய் 2 வருட அவகாசம் மட்டுமே கொடுத்துள்ளது.” என புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய அரசின் டிராய் அமைப்பு, “தற்போது நாங்கள் 3 ஜி மற்றும் 4 ஜி சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகள் தருவதை நிறுத்தி உள்ளோம். அதி வேக நெட் ஒர்கான 5 ஜி சேவையை நாட்டில் அறிமுகப்படுத்த உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகள் அளிக்க தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சீனா மற்றும் அமெரிக்காவில் 5 ஜி தொழில்நுட்பம் உள்ளதால் இந்தியாவிலும் அதை செயல்படுத்த முனையும் நிறுவனங்களுக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளது.