திருச்சி:
பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த அதிமுக எம்.பி. தம்பித்துரை, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சென்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தம்பிதுரை அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தம்பித்துரை, கூட்டணி என்பது பொதுத் திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படுகிறது என்று கூறினார். கட்சியின் கொள்கைகளை விட்டுக்கொடுக்க எந்த கட்சியும் சம்மதிக்காது.. என்றவர், மாநில சுயாட்சி உள்ளிட்டவற்றை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
அதிமுக மீது ஊழல் புகார் குறித்து கவர்னரிடம் மனு கொடுத்த பாமகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, பாமக அளித்த புகாரில் உண்மை இல்லை, அரசியலுக்காக அப்போது அவர்களை கொடுத்திருக்கலாம் என்று நக்கலாக கூறினார்.
தொடர்ந்து பேசிய தம்பித்துரை, ரஜினிகாந்த் அனைவருக்கும் வாழ்த்து செல்லுவார். அவர் நல்ல மனிதர். பாஜக, அதிமுக கூட்டணியில் யார் தலைமை என்ற கேள்விக்கு, கூட்டணியின் தலைமை குறித்து போக போக தெரியும். கூட்டணி தலைமை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறும். இங்கு அதிமுக கூட்டணியில் கட்சிகள் ஒருக்கிணைப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.