புனே

பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் சலுகைகள் கோரி போராட்டம் செய்த ஊனமுற்றோர் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியதில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர்..

மகாராஷ்டிர மாநில பாஜக அரசு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை என அம்மாநில மக்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர். குறிப்பாக ஊனமுற்றோருக்கான நலப்பணிகளை அரசு மேற்கொள்வதில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர்.

புனே நகரில் ஊனமுற்றோர் தங்களுக்காக சிறப்பு கல்வி நிலையங்கள் மற்றும் அரசு வேலை வாய்ப்பு அளிக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை ஒட்டி அரசின் சமூகநலத் துறை அலுவலகத்தின் முன்பு சுமார் 2500 பேர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பதில் அளிக்காததால் போராட்டம் கடுமையாகி உள்ளது. அவர்கள் சாலை மறியல் செய்யவும் ஊர்வலம் செல்லவும் ஆரம்பித்துள்ளனர்.

கூட்டத்தினரை விரட்ட காவல்துறையினர் தடியடி நடத்தி உள்ளனர். இந்த தடியடியில் ஏராளமான ஊனமுற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன் போராட்டக்காரர்கள் மீது குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடு பட்ட 50 ஊனமுற்றோரை கைது செய்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் இது குறித்து உடனடியாக விவர அறிக்கையை தனக்கு அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.