அமெரிக்காவுக்கான புதிய தூதராக சவுதி அரேபியா இளவரசி ரீமா பிண்ட் பண்டர் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவின் வரலாற்றில் வெளிநாட்டுக்கான தூதராக ஒருபெண் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.
பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு நிறைந்த அரபு நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. சமீபத்தில் தான் அந்நாட்டில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம், அலுவலகங்களில் வேலைப்பார்க்க அனுமதி, செய்தித்துறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவுக்கான சவுதி தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சவுதி இளவரசிகளின் ஒருவரான ரீமா பண்ட் பிண்டர் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியாவின் உளவுத்துறையின் தலைவராகவும், அமெரிக்காவுக்கான சவுதி தூதராக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவில் படித்து வரும் ரீமா சவுதி அரேபியாவில் பொது சேவைகளில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளார். கடந்த ஆண்டு பத்திரிகையாளர் ஜமாக் கஷோக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்காவுக்கான சவுதி தூதர் காலித் பின் சல்மான் பெயர் அடிப்படுவதால், அவருக்கு பதிலாக புதிய தூதரை சவுதி நியமித்துள்ளது.