தராபாத்

தார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் காரணமாக பல வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை தெலுங்கான மற்றும் ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.   இதனால் பல வாக்காளர்கள் பெயர் விடுபட்டதாக புகார்கள் எழுந்தன.   இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளை ஒட்டி தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டை இணைக்கும் பணியில் பல வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் 30 லட்சம் வாக்காளர்களும் ஆந்திராவில் 25 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.    இது குறித்து வீடு வீடாக சோதனை எதையும் ஆணையம் மேற்கொள்ளவில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து இந்த தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்த பன்வர்லால் என்பவர், “குறிப்பாக ஐதராபாத் நகரில் வாக்குச்சாவடி மட்ட ஆணைய அதிகாரிகள் யாரும் எவ்வித சோதனையும் மேற்கொள்ளவில்லை.   மற்ற மாவட்டங்களில் இது குறித்து அதிகம் புகார்கள் அளிக்கப்படவில்லை.  ஐதராபாத் மாவட்டத்தில் அதிகம் புகார்கள் வந்துள்ளன’ என தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆந்திர மாநிலத்தில் 76% வாக்காளர்கள் விவரம் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.   அத்துடன் பல இடங்களில் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.    வாக்காளர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்தும் அவர்கள் இது குறித்து ஏதும் புகார் அளிக்கவில்லை  என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவல் ஆணைய பதிலை ஒட்டி தற்போது தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  தலைமை தேர்தல் அலுவலர் அனைத்து வாக்காளர்களையும் தங்கள் பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக விண்ணப்பித்தால் அவர்கள் பெயர்கள் இணைக்கப்படும் என அறிவித்துள்ளார்.