சென்னை:
திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாமக, பதவி ஆசைக்காக நாடாளு மன்ற தேர்தலில் தொபுக்கடீர் என்று அதிமுக கூட்டணியில் மூழ்கியது பாமக நிர்வாகிகள், தொண்டர்களால் ஜீரணிக்க முடியாத நிலையில், அயல்நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை தனது டிவிட்டரில் பதிவு செய்து பாமகவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
இதை பார்க்கும் பாமகவினர் உள்பட நெட்டிசன்கள், அய்யாவுக்கு என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் செமையாக கலாய்த்து வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சி நிர்வாகிகள் பலர், பாமகவில் இருந்து வெளியேறி வரும் நிலையில், இருக்கும் சிலரையும் தக்க வைத்துக்கொள்ள ராமதாஸ் தாஜா செய்து வருகிறார்.
இதற்காக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சில டிவிட்கள் வாசகர்களின் பார்வைக்காக…..
ஒற்றுமை தான் வலிமை. அணியாக இணைந்து பணியாற்றும் தன்மையும், ஒத்துழைப்பும் இருந்தால் அற்புதமான விஷயங்களை நிகழ்த்த முடியும்! – மேட்டி ஸ்டெபனெக்
உண்மையான நட்பின் மிகவும் அழகான குணங்களில் ஒன்று நண்பர்களை புரிந்து கொள்ளுதலும், நண்பர்களால் புரிந்து கொள்ளப்படுதலும் தான்! – லூசியஸ் அன்னெயஸ் செனகா
அனைத்தையும் தாமே செய்ய வேண்டும் நினைப்பவரோ அல்லது அவ்வாறு செய்ததற்கான அனைத்துப் பெருமைகளும் தனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரோ மாபெரும் தலைவராக உருவெடுக்க முடியாது! – ஆண்ட்ரூ கார்னிஜே
‘‘அரசியல் என்பது போரைப் போன்றது. அதில் சில நேரங்களில் விஷவாயுக்களையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்’’ என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூறுவது வழக்கம்.
தமிழகத்திலும் சிலர் அப்படித்தான் தோல்வி பயத்தில் விஷ வாயுக்களை வாயால் பரவ விடுகின்றனர்!
அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறுவதற்கான முக்கியத் தேவை பொறுமை. முட்டை மீது கோழியை அடைகாக்கச் செய்வதன் மூலம் தான் கோழிக்குஞ்சுகளைப் பெற முடியும். மாறாக, முட்டைகளை தரையில் வீசி உடைப்பதன் மூலம் கோழிக்குஞ்சுகளைப் பெறமுடியாது. – அர்னால்டு எச். கிளாசோ
“நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருங்கள். கடுமையாக உழையுங்கள்-நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். புதிய விஷயங்களை தொடர்ந்து கற்று கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான, உண்மையான, நட்பான மனிதர்கள் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள்! –டினா தேசாய்”
இவ்வாறு அதிரடி தத்துவங்களாக பதிவிட்டு வருகிறார்…. இதைக்காணும் நெட்டிசன்கள் அய்யாவுக்கு என்ன ஆச்சு…. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பதில் சொல்லும் அய்யா ராமதாஸ்…. ஏன் இவ்வாறு தத்துவஞானியாக மாறிப்போனார்… எல்லாம் கூட்டணி குளத்தில் குளித்த மகத்துவம் போலும் என்று கலாய்த்து வருகின்றனர்…
எல்லாம் தமிழ் தமிழ் என்றும் பேசும் ராமதாஸ்… அயல்நாட்டு அறிஞர்களின் தத்துவங்களை மேற்கோள் காட்டுவது ஏன்… தமிழ் அறிஞர்கள் யாரும் தத்துவங்கள் கூறவில்லையா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கூட்டணி தொடர்பாக தனது கட்சியினரை நேரடியாக எதிர்கொள்ள முடியாத பாமக தலைவர் ராமதாஸ், இதுபோன்ற டிவிட்களை பதிவிட்டு, தனது கட்சியினரை சமாதானப்படுத்தி வருகிறார்….