டில்லி:
நாடு முழுவதும் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் 6ந்தேதி அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து 5 ஆண்டுகள் முடிவடைய உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல பிரதமர் மோடி இந்த ஆண்டும் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் மார்ச் 6ந்தேதி அன்று அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, இதுவரை மத்திய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் எப்படி செயல்படுத்தப்பட்டன, தற்போதைய நிலைமை என்ன என்பது குறித்து அவர் கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 4 ஆண்டுகளாக தனது அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக நன்றியும் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
அன்றைய தினமே மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த கேபினட் கூட்டம்தான் மோடி அரசின் கடைசி கேபினட் கூட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்பிறதே நாடாளுமன்ற தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.