துபாய்

பாகிஸ்தான் ஒரு அணு குண்டு வெடித்தால் இந்தியா 20 அணு குண்டுகள் வெடிக்கும் என முன்னாள் பாக் பிரதமர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் முதல்வரும் ஆல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான பர்வேஸ் முஷாரஃப் அரசியல் சூழ்நிலை காரணமாக தற்போது பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வருகிறார்.    தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை சரியானால் அவர் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப தயாராக உள்ளதாக அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் பர்வேஸ் முஷாரஃப் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.  அப்போது அவர், “புல்வாமாவில் நடந்த தாக்குதலால் இந்தியா தற்போது பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் உள்ளது.   தற்போதுள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள நிலை அச்சம் ஊட்டுவதாக உள்ளது.    அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என தோன்றுகிறது.

நாம் இந்தியா மீது ஒரு அணு குண்டை வீசினால் அவர்கள் 20 அணுகுண்டுகளை வீசி நம்மை முழுவதுமாக அழித்து விடுவார்கள்.    நிலைமை அவ்வளவு மோசமாக உள்ளது.   இதற்கு ஒரே வழி நாம் 50 அணுகுண்டுகளை வீசி அவர்களை முழுமையாக அழிப்பது மட்டுமே ஆகும்.   ஆனால் தற்போதுள்ள நிலையில் நம்மிடம் 50 அணு குண்டுகள் கிடையாது.

தற்போது பாகிஸ்தான் அரசியல் சூழ்நிலை எனக்கு சாதகமாக உள்ளது.   அமைச்சர்களில் பாதிப்பேர் எனது ஆட்கள் ஆவார்கள்.  பாகிஸ்தான் சட்ட அமைச்சரும் தலைமை வழக்கறிஞரும் என்னிடம் பணி புரிந்த வழக்கறிஞர்கள்” என தெரிவித்துள்ளார்.