டில்லி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பணியின் போது மரணம் அடையும் துணை நிலை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தி நடந்த ஜெய்ஷ் ஈ முகமது தற்கொலைப்படை தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். போரில் இறக்கும் ராணுவ வீரர்களுக்கு மட்டுமே தற்போது தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்பட்டு வருகிறது. இது போல் வன்முறை தாக்குதலில் மரணமடையும் துணை நிலை ராணுவத்தினருக்கு அத்தகைய அந்தஸ்து அளிக்கப்படுவதில்லை.
இந்த தாக்குதல் நடந்த உடன் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் ,”இந்த தாக்குதலில் மரணம் அடைந்தவர்களும் தியாகிகள் தான். அவர்களுடைய வீர மரணமும் போற்றுதலுக்கு உரியதாகும். அவர்களுக்கும் அரசு தியாகிகள் அந்தஸ்து அளிக்க வேண்டும்” என பதிந்திருந்தார். இதற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் இட்டிருந்தனர்.
டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நேற்று முன் தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவரிடம் ஸ்ருதி சவுகான் என்னும் மாணவி விடுத்த வினாவுக்கு பதில் அளிக்கையில் ராகுல் காந்தி, “துணை நிலை ராணுவத்தினர் வன்முறை தாக்குதலில் மரணம் அடைந்தும் போது அவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து தரப்படுவது இல்லை.
இதனால் துணை நிலை ராணுவத்தினருக்கு பல சலுகைகள் கிடைப்பதில்லை. இதுவரை தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 2500க்கும் மேற்பட்ட வீரர்கள் மரண அடைந்துள்ளனர். அவர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து அளிக்கப்படவில்லை. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பணியின் போது இறக்கும் துணை நிலை ராணுவத்தினருக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கப்படும்” என தெரிவித்தார்.