சென்னை
பட்டமேற்படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் அரசு மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கலாம் என செல்வம் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
பட்டமேற்படிப்பு படிக்க உள்ள மருத்துவர்களில் கிராமப்புறங்களில் அரசுப் பணி புரிவோர், மலைப்பகுதிகளில் பணி புரிவோர் உள்ளிட்டோர்க்கு நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. இது குறித்து ஆராய நீதிபதி செல்வம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்றை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க தமிழக அரசு அமைத்தது.
அந்தக் குழு அரசு மருத்துவ்ர்களை நான்கு பிரிவாக பிரித்துள்ளனர். அதாவது மலைப்பகுதிகளில் பணி புரிவோர், கடுமையான பகுதிகளில் பணி புரிவோர், தொலை தூரத்தில் பணி புரிவோர், மற்றும் கிராமப் புறங்களில் பணி புரிவோர் என நான்கு வகை படுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கூடுதல் மதிப்பெண் வழங்க குழு பரிந்துரை செய்துள்ளது.
மலைப் பகுதிகளில் பணி புரிவோருக்கு பணி புரிந்த ஒவ்வொரு வருடத்துக்கும் 10% கூடுதல் மதிப்பெண் வழங்கலாம். இது மொத்தம் 30%க்கு மேல் இருக்கக் கூடாது என பரிந்துரை செய்துள்ளது. இந்த பிரிவின் கீழ் ஊட்டி, கோத்தகிரி மற்றும் ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் உள்ள 119 ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் வருகின்றனர்.
கடினமான பகுதிகள் என கூறாப்படும் பகுதிகளில் பணி புரிவோருக்கு வருடத்துக்கு 9% கூடுதல் மதிப்பெண்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது 27%க்கு மேல் இருக்க கூடாது. இதன் கீழ் 660 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் நடத்தும் 85 மருத்துவமனகள் வருகின்றன.
தூரமான பகுதிகளில் பணிபுரிவோருக்கு வருடத்துக்கு 8% எனவும் மொத்த மதிப்பெண் 24% மேல் இருக்க கூடாது எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 23 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 3 மாவட்ட மருத்துவ மனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக கிராமப்புறங்களில் பணி புரிவோருக்கு வருடத்துக்கு 5% எனவும் அதிகமாக 15% எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 1210 ஆரம்ப சுகதார நிலையங்களிலும் 119 மாவட்ட நிர்வாக மருத்துவமனைகளும் இடம் பெறுகின்றன” என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.