சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தைகள் பரபரப்பாக அரசியல் கட்சிகளிடையே நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தேமுதிகவின் நிலை என்ன என்பது குறித்து தெரியும் என்று தேமுக மகளிர் அணி தலைவியும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா கூறி உள்ளார்.

உடல் நலம்  பாதிப்பு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக ஆண்டு இறுதியில் அமெரிக்கா  சென்றார்.  அங்கு ஒருசில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக  கடந்த 16ந்தேதி சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் தீவிரமாக பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன. திமுக, அதிமுக தலைமையில் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க தயாராகி வருகின்றன.

ஆனால், தேமுதிக இதுவரை அதிமுக, திமுக கூட்டணியில் சேராமல் இழுத்தடித்து வருகிறது. கூட்டணியில் சேர அதிக தொகுதிகள் கேட்பதால், பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று திடீரென நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நடிகர் விஜயகாந்தை அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர்.

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த்,  பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையில் எந்தவித இழுபறியும் இல்லை விரைவில் தொகுதி பங்கீடு பற்றிய தகவல்கள் வெளிவரும்  கூட்டணியில் எங்களுக்கான தொகுதிகள் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் தே.மு.தி.க.வுக்கு உள்ள வாக்கு வங்கி பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும் என்றவர், தே.மு.தி.க. வின் நிலைப்பாடு பற்றிய முழு விவரமும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும் உரிய முடிவை உரிய நேரத்தில் கேப்டன்  முடிவு செய்வார்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.