இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 12 கிச்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சர்வதேச அளவில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெயில் பெற்றுள்ளார்.
மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்றது.
இதன் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 360 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இமாலய இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிரடி வீரர் கிறிஸ் கெயில் சிறப்பாக தொடக்கம் கொடுத்தார். இந்த போட்டியில் 129 பந்துக்களை எதிர்க் கொண்ட கிறிஸ் கெயில் 12 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்ட்ரிகளை அடித்து 135 ரன் குவித்தார்.
இந்த போட்டியில் 12 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் கிறிஸ் கெயில் புதிய சாதனை படைத்துள்ளார். 444 போட்டிகளில் 477 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதற்கு முன்னதாக சயித் அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்ஸர்கள் அடித்தது தான் சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது கிறிஸ்கெயில் முறியடித்துள்ளார்.
கிறிஸ்கெயில் இதுவரை பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில் 276 சிக்ஸர்களையும், டி20 போட்டிகளில் 103 சிக்ஸர்களையும், டெஸ்ட் போட்டிகளில் 98 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் நடைபெறும் உலகக் கோப்பை தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.